மாநாடு திரைவிமர்சனம்

மாநாடு – இது வெங்கட் பிரபுவின் அரசியல்.

வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்த தமிழ்த் திரைப்படம் ‘மாநாடு’. இதில் சிலம்பரசன், எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இசை மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் படத்தொகுப்பை பிரவீன் கே.எல் செய்துள்ளார்.

நடிப்பு – சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு – வி.ஹவுஸ் புரொடக்ஷன்
இயக்கம் – வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் ‘டைம் லூப்’ என்ற புதிய கான்செப்டில் வந்திருக்கும் படம் மாநாடு.

டைம் லூப் என்பது என்ன?

டைம் லூப் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சிக்கி அதை மீண்டும் மீண்டும் வாழுவது. ஒரே தருணத்தில் மீண்டும் மீண்டும் வாழும் ஒரு நபரின் வாழ்க்கை ஒரு டைம் லூப் உருவாக்குகிறது.

உலகளவில் டைம் லூப், டைம் மெஷின் அல்லது கால பயணம் சார்ந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், நம் நாட்டில் சற்று குறைவு தான். சமீப காலத்தில் தான் இது போன்ற சயின்ஸ் பிக்ஷன் படங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன.

கதை

ஊட்டியில் நண்பனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக துபாயில் இருந்து சிலம்பரசன் வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சூழ்ச்சி வலையில் மாட்டிக்கொள்கிறார். அதில் அவர் பலியாக, மீண்டும் அந்த நாள் முதலிலிருந்து தொடங்குகிறது. அந்த நாளில்தான் தமிழக முதல்வரும் சுட்டுக் கொல்கிறார்கள். எதற்காகச் சுடுகிறார்கள், யார் சுடுகிறார்கள், தனக்கு ஏன் நடந்ததே திரும்பத் திரும்ப நடக்கிறது என்பதை சிம்பு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை. நாயகன் வழியாக வில்லனுக்கும் டைம் லூப் விளைவு தொற்றிக்கொண்டு, இருவருக்குமான ஆடுபுலி ஆட்டமாக சுவாரஸ்யமான ட்ரீமென்ட்டை திரைக்கதைக்கு தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

பொதுவாக சிலம்பரசனின் படங்கள் என்றாலே ஹீரோயிச பஞ்ச் வசனங்கள், விரலை ஆட்டி பேசுவது, காதல், டூயட் என்பது போன்ற செயல்கள் அனைத்தும் இல்லாமல், ஒரு புதிய கதாபாத்திரத்தில் புதிய தோற்றத்தில் பிரஷ் ஆக நடித்திருக்கிறார் சிம்பு.

போலீஸ்காரராக வரும் எஸ்.ஜே.சூர்யா திரையில் தோன்றும் வரும் இடங்களிலெல்லாம் கைத்தட்டல்கள் பறக்கின்றன. சிம்புவுக்கு இணையாய்க் கொடிபிடித்து வெற்றிநடை போடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. ஒரு கட்டத்தில் படத்தின் ஹீரோ சிம்புவா அல்லது எஸ்.ஜே.சூர்யாவா என ஆச்சரியப்பட வைக்கிறார். அதிலும் ஜீப்பில் வரும் ஒரு காட்சியில் “தலைவரே…தலைவரே…தலைவரே…” எனப் பேசும் போது தியேட்டரே அதிர்கிறது.

நாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை, ஆனாலும் படம் முழுவதும் இவர் வருவது போன்ற காட்சியமைப்புகள். கொடுக்கப்பட்ட பணியை மட்டும் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்.

படத்தின் எடிட்டிங் மிக அருமையாக இருக்கிறது இத்திரைப்படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட் ஆக திரைப்படத்தின் எடிட்டிங் அமைந்துள்ளது. இத்திரைப்ப்டத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ள பிரவீனுக்கு இது 100வது திரைப்படமாகும் அதில் அவர் அசத்தியிருக்கிறார்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கிளாஸ் ரகம்.

கடைசி காட்சிவரை களைகட்டுகிறது இந்த ‘மாநாடு’.