’மின்னல் முரளி’ திரை விமர்சனம்

சூப்பர் ஹீரோ சினிமா ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க வந்துள்ள படம் ‘மின்னல் முரளி’.

நடிப்பு – டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ், பைஜு, ஹரிஸ்ரீ அசோகன், மம்முக்கோயா
இசை – சுஷின் ஷ்யாம், ஷான் ரோல்டன்
தயாரிப்பு – வீக் என்ட் பிளாக்பஸ்டர்ஸ்
இயக்கம் – பேசில் ஜோசப்

கதை

கிராமத்தில் தந்தையின் தையல் கடையை நிர்வகித்து வரும் மகனான டொவினோ தாமஸ்னுக்கு தனது காதலியுடன் அமெரிக்காவில் போய் செட்டிலாகி விடவேண்டும் என்பதே லட்சியம். அதேபோல அந்த ஊரில், பல வருடங்களாக தான் தூரத்திலிருந்து நேசித்து வந்த பெண் ஊரை விட்டு ஓடிய சோகத்தில் அனைத்தையும் இழந்து டீக்கடையில் வேலை செய்யும் குரு சோமசுந்தரம். இருவருமே கிராம மக்களால் விரும்பப் படாத நபர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு பெரிய மின்னல் ஒன்று இருவரையும் தாக்கி விடுகிறது. ஆச்சரியமாக மறுநாள் காலையில் இருவரும் உடலில் எந்தக் காயங்களும் இன்றி உயிர் பிழைக்கின்றனர். இருவருக்குமே சூப்பர்மேன் சக்தியும் கிடைக்கிறது. அன்று முதல் இருவரது உடலிலும் சில மாற்றங்கள் தெரியத் தொடங்குகின்றன. இருவருமே தங்களுக்கு சூப்பர் பவர்கள் கிடைத்துள்ளதை தெரிந்து கொள்கின்றனர். இருவருமே முதலில் தங்கள் சக்திகளை அவரவர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். பின்னர் இருவரது வாழ்க்கையிலும் ஏற்படும் தனிப்பட்ட இழப்பு ஒருவரை சூப்பர் வில்லனாகவும் மற்றொருவரை சூப்பர் ஹீரோவாகவும் மாற்றுகின்றன. அதன் பிறகு என்னவானது என்பதே ‘மின்னல் முரளி’ சொல்லும் திரைக்கதை.

இயக்குனர் பேசில் ஜோசப் தெளிவான திரைக்கதையுடன், சரியான லாஜிக்குடன் படத்தை அழகாக நகர்த்திச் சென்றுள்ளார். சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் அவர்களை அவரவர் பாதைகளை தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பதை பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார் இயக்குநர் பேசில் ஜோசப்.

மின்னல் முரளியாக நடித்துள்ள டொவினோ தாமஸ். ஒரு காதல் தோல்விக்கு சாதாரணமாக அலட்டிக்கொள்ளும் வாலிபனாக, சூப்பர் பவர் கிடைத்தும் கூட, அதை ஒரு பெரிய விஷயமாக கருதாத ஒரு மனிதனாக தனது கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி போகிறார். தனக்கு சூப்பர் பவர் கிடைத்திருப்பதை அவர் படிப்படியாக உணர்ந்து கொள்ளும் காட்சிகள் எல்லாம் காமெடி மற்றும் கலக்கல் ரகம்.

படத்தில் ஹீரோவுக்கு சரிசமமான பாத்திரம் குரு சோமசுந்தரத்துக்கு. ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘ஜோக்கர்’ வரிசையில் பேர் சொல்லப் போகும் கதாபாத்திரம். விரக்தி, கோபம், அழுகை, கோர சிரிப்பு என காட்சிக்குக் காட்சி தெறிக்க விடுகிறார்.

படம் முழுவதும் 90-களில் நடப்பதால் அந்தக் காலகட்டத்தை சரியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் விலகாத திரைக்கதையின் நேர்த்தியும் அழகான ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலங்கள் . குறிப்பாக , ஆரம்பத்தில் வரும் நாடகக் காட்சி, குரு சோமசுந்தரத்தின் காதல் காட்சிகள், இறுதி சண்டைக் காட்சிகள் அனைத்தும் சமீர் எஸ்.தாகீரின் தரமான ஒளிப்பதிவால் மனதில் நிற்கிறது.

இந்த மின்னல் முரளி நிச்சயம் ஒரு சூப்பர் ஹீரோ தான்.