பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி?

நம் நாட்டில் தண்டவாளங்களை தகர்க்க, அண்டை நாடான பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநில எல்லைக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது பரவலாக நடக்கிறது. நம் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து அதை தடுத்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதை நம் உளவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக சரக்கு ரயில் இயக்கப்படும் தண்டவாளங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில், நம் ராணுவத்தின் முக்கிய தகவல்களை திரட்டி, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பிடம் அளித்த பஞ்சாப் போலீசார் ஜாபர் ரியாஸ், ஷம்ஷத் ஆகிய இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜாபர் ரியாஸ், 2005ல் பாகிஸ்தானிய பெண் ரபியாவை திருமணம் செய்துள்ளார். இருவரும் ராணுவ கட்டடங்கள் மற்றும் வாகனங்களை புகைப்படம் மற்றும் ‘வீடியோ’ எடுத்து பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்பிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் தான், ரயில் தண்டவாளங்களை தகர்க்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய உளவுத்துறை வெளியிட்ட தகவலில், ‘பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, பஞ்சாப்பில் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில், சரக்கு ரெயில்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக காலிஸ்தான் அமைப்பிற்கும், ஸ்லீப்பர் செல்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தண்டவாளப் பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.