மறைந்த முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கார்பசேவின் இறுதி சடங்கில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை.
சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த மிகைல் கார்பசேவ், உடல்நலக்குறைவால் தனது 91வது வயதில் நேற்று முன்தினம் காலமானார். இவருடைய மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். இது, பெரும் அவமதிப்பாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக புடினின் செய்தி தொடர்பாளர் டிமிரிட்டி பெஸ்கோவ் நேற்று அளித்த பேட்டியில், ‘சனிக்கிழமை நடைபெறும் கார்பசேவின் இறுதிச் சடங்கில் அதிபர் புடினால் பங்கேற்க இயலாது. ஆனால், மாஸ்கோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு புடின் அஞ்சலி செலுத்துவார். ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. கார்பசேவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்,’ என தெரிவித்தார்.