தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய அரசின் தேசியத் தூய காற்றுத் திட்டம் (National Clean Air Programme – NCAP) 2019ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டின் காற்று மாசுபாட்டு அளவுக்குக் கீழாக, பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 துகள்மங்கள் அடர்த்தியில் 20% முதல் 30% குறைப்பை 2024ஆம் ஆண்டில் எட்ட வேண்டும் என்பது இத்திட்டத்தின் இலக்காகும். இத்திட்டத்தில் முதலில் சென்னை மாநகரம் இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலுக்கு பிறகு தான் இத்திட்டத்தின் சென்னை சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் போதிலும் சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மேற்கொள்ள வேண்டிய காற்று மாசு தடுப்புக்கான திட்டங்களை இன்னமும் மேற்கொள்ளவில்லை. காற்று மாசுபாடு என்பது ஒரு பொதுச்சுகாதார அவசரநிலை ஆகும்.
பூவுலகையே அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள முப்பெரும் பூகோள அவசரநிலைகளான காலநிலை மாற்றம், உயிரிப்பன்மய அழிவு, மாசுபாடு ஆகிய அனைத்துக்கும் காற்று மாசுபாடே காரணமாகும். சென்னைப் பெருநகரில் ஒரு முழுமையான தூய காற்றுச் செயல்திட்டத்தைச் செயலாக்குவதன் மூலம், இந்த முப்பெரும் பூகோள அவசரநிலையை எதிர்கொள்ளும் மாபெரும் பணியில் சென்னைப் பெருநகரமும் பங்கேற்க முடியும். எனவே, சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்கு பின்வரும் 5 நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாளில் வலியுறுத்துகிறேன்.
நகர்ப்புறக் காற்று மாசுபாட்டிற்குக் கட்டட இடிபாடுகள் ஒரு காரணமாக உள்ளன. சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் சாலைப் புழுதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக செயலாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, சென்னை கலங்கரை விளக்கம் & பூவிருந்தவல்லி இடையிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக மட்டும் ரூ.22.79 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கான தன்னிச்சையான கண்காணிப்பு நிறுவனத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை. அதாவது, சுற்றுச்சூழல் விதிகள் செயலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பு இல்லாமலேயே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடக்கின்றன. இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் கட்டடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 சென்னைப் பெருநகரில் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளிலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளிலும் இந்த விதியை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையைக் கட்டுக்குள் வைக்கும் விதிகளை சென்னை மாநகரில் முழுமையாகச் செயலாக்க வேண்டும். வாகனப் புகைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிச் சென்னை மாநகரில் ஒரே ஒரு வாகனம் கூட இயங்கவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். புகைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிவதற்காகத் தொலையுணர்வுக் கருவிகள் மூலம் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறியும் முறையைச் சென்னையில் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.