ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் ‘டி’ தேர்வு தற்போது 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதற்கட்ட தேர்வு கடந்த மாதம் நிறைவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட தேர்வு கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து மூன்றாவது கட்ட தேர்வு வரும் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

மூன்றாம் கட்டத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர், சேலம், சென்னை பகுதியில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், தேர்வு மையம் ஆந்திர மாநிலத்தில் போடப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சதீஷுக்கு ஆந்திரா மாநிலம் கர்நூல் பகுதியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு தொடர்ந்து வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருவது மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாணவர்களை திட்டமிட்டே வஞ்சிப்பதாகவும், தேர்வு மையங்களை உடனடியாக மாற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்திற்குரியது. ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக எம்.பி.க்கள் இதுகுறித்து உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.