பிரிட்டன் பிரதமர் ஆகிறார் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்!

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் சொந்த கட்சியான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்கு பதிவு அண்மையில் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று, இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்கு, பிரிட்டன் பிரதமர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பிரிட்டன் பிரதமர் தேர்தலில், வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், ரிஷி சுனக்கிற்கு, 60 ஆயிரத்து 399 வாக்குகளும், லிஸ் டிரஸ்ஸிற்கு 81 ஆயிரத்து 326 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ் வீழ்த்தி பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்வாகி உள்ளார். புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ள லிஸ் டிரஸூக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக லிஸ் டிரஸ் முறைப்படி பதவியேற்றவுடன், இங்கிலாந்தின் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகப் போவதாக பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக டிரஸ் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரித்தி படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவித்துள்ளார். டிரஸ் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்பியுள்ள தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, பிரித்தி படேல் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நம்முடைய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ்ஸை வாழ்த்துகிறேன். மேலும் நம்முடைய புதிய பிரதமரான அவருக்கு எனது ஆதரவை வழங்குவேன். லிஸ் முறைப்படி பதவி ஏற்றதும், புதிய உள்துறை மந்திரி நியமிக்கப்பட்டதும், பின்வரிசையில் இருந்து நாட்டிற்கும் எனது தொகுதிக்கும் எனது பொதுச் சேவையைத் தொடர்வது எனது விருப்பம்” என்று கூறியுள்ளார்.