அமெரிக்காவின் பிரபலமான காலணி நிறுவனமான நைக் (Nike), ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தது. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகின்றது. சுமார் 7 மாதங்களாக நடந்து வரும் இந்த தாக்குதல் இதுவரையில் முடிவுக்கு வந்த பாடாகவும் இல்லை. உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பின் வாங்காமல் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ஆரம்பத்தில் இருந்த பல மேற்கத்திய நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் எதற்கும் ரஷ்யா செவி மடுத்ததாகவும் தெரியவில்லை. சொல்லப்போனால் ரஷ்யாவின் வசம் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற பதற்றமும் அங்கு நிலவி வருகின்றது. இது குறித்து ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகளும் கண்டனமும் தெரிவித்துள்ளன. குறிப்பாக இவ்வாறு ரஷ்யா செய்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகளும் எதிர்ப்பினை காட்டும் விதமாக தடைகளை விதித்து வருகின்றன. பல நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பினை காட்டும் விதமாக ரஷ்யாவில் இருந்து தங்களது வணிகத்தினையே வெளியேற்றி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் பிரபலமான காலணி நிறுவனமான நைக் (Nike), ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தது. ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு தனது எதிர்ப்பினை காட்டும் விதமாக ரஷ்யாவில் உள்ள கடைகளை தற்காலிகமாக முன்னதாக நைக் மூடியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பிரச்சனை தீவிரமாக சென்று கொண்டுள்ள நிலையில், அந்த கடைகளை மீண்டும் திறக்க போவதில்லை என தீர்க்கமாக அறிவித்தது. அதேபோல ஆன்லைனில் நைக் சேவையினை இனி ரஷ்யாவில் பெற முடியாது என அறிவித்தது.
இதற்கிடையில் தான் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நைக் இன்க் நிறுவனத்துடன் பேசியதாகவும், ரஷ்யாவை விட்டு வெளியேறியது சரியான முடிவு என்று கூறியதாகவும், அதற்காக அமெரிக்கா நிறுவனத்திற்கு நன்றி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மனிதகுலம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதில் வணிகம் எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. நைக் மட்டும் அல்ல, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்-ம் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்றுமதியினை முடக்கியுள்ளது. எனினும் இது மீண்டும் அக்டோபரில் தனது வணிகத்தினை தொடங்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
முன்னதாக ஒரு அறிக்கையில் நைக் உக்ரைன் ரஷ்யாவில் இருந்து மொத்தம் அதன் வருவாயில் 1% மட்டுமே இப்பகுதிகளில் இருந்து பெறுவதாக நைக் தெரிவித்திருந்தது. ஆக நைக்கின் இந்த நடவடிக்கையினால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரஷ்யாவில் இருந்து மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ், நிறுவனங்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளன.