போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை அதிகரித்த அரசாணைக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019- ஆம் ஆண்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. பல மாநிலங்களில் புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, 46 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ரூ. 10 ஆயிரம் அபராதம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனம் ஓட்டுபவருக்கு மட்டும் இன்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, பைக்கில் இருவருக்கு மேல் பயணித்தால் ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 என அபராதம் விதிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட புதிய வாகன சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டது. விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் போலீசார் பாரபட்சம் இன்றி அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 15 நாட்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலமடங்கு அபராத தொகை விதிக்கப்பட்டதை அறியாத ஒரு சில வாகன ஓட்டிகளும் போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் சில இடங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜலாலுதின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள் விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்தாலும் அபராத தொகை உயர்த்தி இருப்பதால், அப்பாவி மக்களை போலீசார் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன்பாக முறையான சாலை வசதியை மக்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவே அபராத தொகையை உயர்த்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.