ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை நங்கள்தான் வழங்கினோம்: ஈரான்

உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஆளில்லா விமான குண்டுகளை தாங்கள்தான் வழங்கியதாக ஈரான் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து டெக்ரானில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீரப்துல்லாஹியான் கூறியதாவது:-

ரஷ்யாவுக்கு எங்களது ஆளில்லா விமானங்களை குறைந்த எண்ணிக்கையில் நாங்கள் விநியோகித்தது உண்மைதான். ஆனாலும், உக்ரைன் போா் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்த விமானங்களை ரஷ்யாவுக்கு வழங்கிவிட்டோம். தற்போது அந்த விமானங்கள் மூலம் உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அந்த நோக்கத்திற்காக நாங்கள் அவற்றை ரஷ்யாவுக்கு அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் ரஷ்யா ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா விமான குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இலக்குகள் மீது மிகத் துல்லியமாக மோதி தன்னையே அழித்துக்கொள்ளும் அந்த ஆளில்லா விமானங்களால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மலிவான அந்த விமானங்களை ஈரான்தான் ரஷ்யாவுக்கு அளித்ததாக மேலை நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. அதனை இதுவரை மறுத்து வந்த ஈரான், தற்போது ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை அளித்ததாக முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.