ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கணும்: ராமதாஸ்!

அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:-

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது! 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது!

6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்! இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.