கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி அவர்களை வரவேற்பதாக கூறி உரையை தொடங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்தியாவின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள் – தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர். இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்தத் தமிழ் மண்!

வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள்! அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக் கழகத்தில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் வருக வருக வருக என வரவேற்கிறேன்.

கல்வியின் வழியாக மனிதரைச் சமூகத்துக்குப் பயனுள்ளவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் உயர நாடு உயரும்” என்ற காந்தியக் கொள்கையின் அடிப்படையில், தேசத் தந்தை காந்தியடிகளின் நல்லாசியோடு அவர்களுடைய சீடர்களான டாக்டர் ஜி.ராமச்சந்திரன், அவரது துணைவியார் டாக்டர் எஸ்.சௌந்தரம் அவர்களால் தொடங்கப்பட்ட கிராமிய பயிற்சி நிறுவனம் இன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ந்து, சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும், வெளிநாடுகளைச் சார்ந்த மாணவர்களும், இங்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் பயின்று வருகின்றனர் என்பதை அறியும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன். இதற்கு ஏதுவாக, கல்வி கொடையாக 207 ஏக்கர் நிலத்தினை இப்பல்கலைக் கழத்திற்காக வழங்கிய சின்னாளப்பட்டியைச் சேர்ந்த புரவலர்களை இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் கூற்றிற்கு ஏற்ப முற்போக்குச் சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன். உண்மை, ஒழுக்கம், வாக்கு தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக் குவியலை எதிர்த்தல் போன்றவை காந்தியத்தின் அடிப்படைகள்! இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள்! இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம்.

இந்த பெருமைமிகு விழாவில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சிக்குரியதாகும். இசைஞானி என்ற பெருமைமிகு பட்டத்தை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இசை உலகத்தின் மாமேதையான இளையராஜா அவர்களையும், மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் அவர்களையும், பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவரையும் வாழ்த்துகிறேன். கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களும் இங்கு படித்து வருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. இதனை மேலும் வலுமைபடுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு போன்ற திட்டங்களால் அனைவரும் உயர்கல்வியில் பயில அரசு ஆவணம் செய்து வருகிறது.

நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால் தமிழ்நாடு எல்லையை தாண்டி அனைத்து மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்கும் திட்டமாக உள்ளன. சமூகத்திற்கு சேவை செய்வதே ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியின் சிந்தனையை இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.