ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜெய்ராம் ரமேஷ்!

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என, காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்டோர் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தனர்.

இதற்கிடையே தன்னை விடுவிக்கக் கோரி ராஜிவ் காந்தி குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல், தங்களையும் விடுதலை செய்யக் கோரி, நளினி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆளுநர் ரவி மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என கூறிவந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது தவறான முடிவு; முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் இந்தியாவின் உணர்வுக்கு இசைவாக செயல்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ராஜீவ் காந்தி கொலை எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள், அவர்களின் விடுதலையால் குடும்பத்தினர், அரசியல் கட்சிகள், உடனிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள். ஏற்கவோ, மறுக்கமோ ஏதும் இல்லை அதே நேரத்தில் 6 பேரின் விடுதலையால் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொல்ல முடியாது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்றாலும், சரியான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும். நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதில் ஏற்றுக்கொள்வதற்கோ, மறுப்பதற்கோ எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.