முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை, தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இவர்களின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு இயற்றிய அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் காலம் தாழ்த்தியதை “மித மிஞ்சிய தாமதம்” என்று குறிப்பிட்டு ஆறு பேரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறுகையில், ‘ஆறு பேர் விடுதலை ஆறுதல் அளிக்கிறது. மிகவும் காலம் தாழ்ந்த விடுதலை எனினும் நீண்டகால ஏக்கம் தணிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஓயாத போராட்டத்திற்குக் கிடைத்த உன்னத வெற்றி. தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு. ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும்’ என்று கூறியுள்ளார்.
