அமெரிக்காவின் டெக்சாஸில் விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸில் தல்லாஸ் எக்ஸிக்யூட்டிவ் ஏர்போர்ட்டில் விமானப்படை சாகச நிகழ்வு நடைபெற்றது. இதில் போயிங் பி-17 பாம்பர் மற்றும் சிறிய ரக பெல் பி-63 கிங் கோப்ரா விமானம் ஆகியவை நடுவானிலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. அப்படி கீழே விழுந்து விமானங்கள் சுக்குநூறாக சிதறின. இதில் 6 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதேசமயம் விமானிகள் நிலை குறித்து இன்னும் தெரியவரவில்லை.
விபத்தில் சிக்கிய பி-17 பாம்பர் விமானமானது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனிக்கு எதிரான போரில் வெற்றி பெற மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. இதில் 4 எஞ்சின்கள் இருக்கின்றன. மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை போர்க்களத்தில் போடுவதற்கு பயன்படுத்தப்பட்டன. இதேபோல் பி-63 விமானமும் அதே போரில் பயன்படுத்தப்பட்டது. இதனை சோவியத் விமானப் படைக்கு எதிராக பெல் ஏர்கிராப்டு நிறுவனம் பயன்படுத்தியது.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடந்த சம்பவம் தொடர்பாக FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் ஆகியவை விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள தல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன், ஏர்ஷோவில் நடந்த மிகவும் பயங்கரமான விபத்தை பலரும் பார்த்திருக்கக் கூடும். இந்த விபத்து தொடர்பான நிறைய விஷயங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவ இடத்தில் தல்லாஸ் காவல்துறை, தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.