டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து அணி.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8வது டி20 உலகக்கோப்பை 16 அணிகள் பங்கேற்றன. இதில் சூப்பர்12 சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதலாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை எளிமையாக வென்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இறுதிப்போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபடச்சமாக மசூத் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ரஷீத் 2, சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கத்தில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் இருந்தனர். பின்னர் பென் ஸ்டோக்ஸ், புரூக் இருவரும் நிலைத்து ஆடி ரன் சேர்த்த்னர். புரூக் 20 ரன்களில் வெளியேற தொடர்ந்து ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதில் ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சாம் கரன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.