டுவிட்டர் நிறுவனத்தில் அடுத்த அதிரடியாக ஊழியர்கள் சுமார் 4,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார். டுவிட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், டுவிட்டர் நிறுவனத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எலான் மஸ்க் எடுத்து வருகிறார். குறிப்பாக, 7,500 பேர் பணிபுரியும் டுவிட்டர் நிறுவனத்தில் பெருமளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் நடவடிக்கையாக டுவிட்டர் சிஇஓ பராக் அக்ரவாலை பணி நீக்கம் செய்யப்பட்டார். டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பணி புரியும் டுவிட்டர் ஊழியர்கள், அமெரிக்காவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில் பணி புரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 50 சதவீத பணியாளர்கள் பணீ நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அவசியமானது என எலான் மஸ்க் நியாயப்படுத்தியுள்ளார். ‘நாளொன்றுக்கு 40 லட்சம் டாலர்கள் நஷ்டமடைவதால் டுவிட்டர் நிறுவனத்தில் இத்தகைய பணி நீக்கங்கள் அவசியமாகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் அடுத்த அதிரடியாக ஊழியர்கள் சுமார் 4,000 முதல் 5000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள் என தெரிய வந்துள்ளது. எலான் மஸ்க் மற்றும் டுவிட்டரின் உயர்மட்ட நிர்வாகத்தின் நேரடி உத்தரவின் பெயரில் சனி, ஞாயிற்றுக்கிழமையில் பணிநீக்க நடவடிக்கை அரங்கேறியுள்ளதாக தெரிகிறது. இதில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்திருக்கவில்லை; சிலர் டுவிட்டர் நிறுவனத்தில் முக்கியமான பணிகளை செய்து கொண்டிருக்கும்போதே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.