பழங்குடியினர் உடை அணிந்ததற்காக என்னை காங்கிரஸ் கேலி செய்தது: பிரதமர் மோடி

பழங்குடியினர் உடை அணிந்ததற்காக காங்கிரஸ் கட்சி தன்னை கேலி செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டப் கொடுக்கும் என கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் உள்ள பரூச் மாவட்டத்தில் உள்ள ஜம்புசார் நகரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்தியாவில் பழங்குடியினர் இருப்பதைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் நீண்ட காலமாக அறியாமல் இருந்தனர். பழங்குடியினர் ராமர் மற்றும் கிருஷ்ணரின் காலத்திலிருந்து இங்கு வசிக்கின்றனர். ஆனால், ஆதிவாசிகள் இருப்பதை காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒருபோதும் தெரியாது. வாஜ்பாய் பிரதமராகும் வரை பழங்குடியினருக்கென தனி அமைச்சகம் இல்லை. வாஜ்பாய் மத்தியில் ஆட்சி செய்யும் போது தான், தனி அமைச்சகம் அமைத்து, அவர்களின் நலனுக்காக பட்ஜெட் ஒதுக்கியது. இன்றும், காங்கிரஸ் தலைவர்கள் என்னை கேலி செய்கின்றனர். பொது நிகழ்ச்சிகளில் பழங்குடியினரின் பாரம்பரிய உடைகளை அணிந்ததற்காக காங்கிரஸ் தலைவர்கள் என்னை கேலி செய்தனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.