ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சீராய்வு மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர் பயாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்டோர் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தனர்.

இதற்கிடையே தன்னை விடுவிக்கக் கோரி ராஜிவ் காந்தி குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல், தங்களையும் விடுதலை செய்யக் கோரி, நளினி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆளுநர் ரவி மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என கூறிவந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது தவறான முடிவு; முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் இந்தியாவின் உணர்வுக்கு இசைவாக செயல்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.