தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து கடந்த மாதம் அது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமர்வு, ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்’ என உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனுவும், அதேப்போன்று தமிழக அரசு தரப்பில் கேவியட் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை முன்னதாக விசாரித்த நீதிமன்றம், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரிகளை மூன்று மாதத்துக்குள் நியமிக்க வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் மனுதாரர் நீதிமன்றத்திற்கு வந்து முறையிடலாம்’’ என தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசின் மின்கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தனர். மேற்கண்ட இடைக்கால உத்தரவுக்கு எதிராக நூற்பாலைகள் சங்கம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கோகுல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத் துறையை சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று முன்னதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு இன்னும் நியமிக்காமல் உள்ளது. மேலும் இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் அல்லது மறுபரீசிலனை செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார்.
அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன், குமணன் ஆகியோர் வாதத்தில்,‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்க முன்னாள் நீதிபதி பாரதி தாசன் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டு, உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இதில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த வழிகாட்டு உத்தரவின் படி விரைவில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கப்படுவார்’’ என கூறினர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரரின் நோக்கம் என்பது மின்கட்டண உயர்வுக்கு தடை கோருவது போல் உள்ளது. அதற்கான சாத்தியங்கள் கிடையாது. நீதிமன்றம் அதற்கான உத்தரவை பிறப்பிக்காது. அதனால் தமிழ்நாடு மின் கட்டண உயர்வுக்கு எந்த தடையும் கிடையாது. மேலும் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்க தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இதில் நீதிமன்ற மீறலோ, அவமதிப்போ என்று எதுவும் கிடையாது. அதனால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரிக்க ஒன்றும் இல்லை. இருப்பினும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவரை உரிய காலத்துக்குள் நியமிக்க வேண்டும். கால தாமதம் எதுவும் செய்ய வேண்டாம்’’ என்று உத்தரவிட்டனர். தமிழக மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என கடந்த அக்டோர் மாதம் 14ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.