சீனப் பயணிகளை மட்டும் குறிவைத்து பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன: சீனா!

சீனப் பயணிகளை மட்டும் குறிவைத்து பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் மக்கள் தொகையில், சுமார் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, உலக நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா, பிரான்ஸ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சீனப் பயணிகளை மட்டும் குறிவைத்து பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:-

சில நாடுகள், சீனாவில் இருந்து வருபவர்களை குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இது விஞ்ஞான அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை. சில நடைமுறைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.