தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்க சென்னையில் வசதிகள் தேவை: அண்ணாமலை கடிதம்!

மைசூருவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மத்திய கலாச்சார அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வகத்தில், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளின் படிகள் பாதுகாக்கப்பட்டன. இங்கு தமிழ் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அவற்றை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வெட்டுப் படிகள் சென்னை கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், சென்னைக்கு மாற்றப்பட்ட தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய கலாச்சார அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

மைசூருவில் உள்ள தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவில் பாதுகாக்கப்பட்ட 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகள், 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மண்டல அலுவலகத்துக்கு மாற்றப்பட்டன. இவற்றைப் பாதுகாக்கும் வசதி சென்னை மண்டல அலுவலகத்தில் இல்லை. இந்த முக்கியமான கல்வெட்டுகள் வெப்பநிலை மற்றும் பாதகமான வானிலை காரணமாக உடைந்து போகின்றன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, சென்னை மண்டலத்தில் கல்வெட்டுகளை பாதுகாக்க வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.