முழுமையான ஆதாரங்களுடன் உள்ள இந்த ஆவணப்படத்தை உலகின் அனைத்து மக்களுக்கும் பிபிசி நிறுவனம் கொண்டு சென்று சேர்க்கும் என்று தெரிவித்துள்ளது.
குஜராத் படுகொலை குறித்து பிபிசி செய்தி நிறுவனம் ‘India, The Modi Question’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து, அதன் முதல் பகுதியை வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக அரசுக்குப் பதில் அளித்து பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-
உலகெங்கும் நடக்கும் முக்கியமான பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை மக்களிடம் எடுத்துரைப்பது என உறுதி பூண்டுள்ளது பிபிசி நிறுவனம். இந்த ஆவணப்படத்தை எடுக்கும்போது, குஜராத் மாநில அரசு மற்றும் இந்திய அரசிடம், எங்களிடம் இருந்த ஆதாரங்கள் குறித்து உரிய பதில்களை பெறுவதற்காக நாங்கள் பலமுறை அணுகியும், அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
* குஜராத் கலவரம் என்பது இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அங்கு நடந்துள்ள மிக மோசமான, கோரமான கலவரம். இந்த ஆவணப்படத்தில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் முழுமையாக, கடுமையாக ஆராயப்பட்டவை.
* குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் குரல்கள், சாட்சிகளின் பதில்கள் மற்றும் நிபுணர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவை அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாஜகவை சேர்ந்த பலரின் பதில்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் உட்பட பலவிதமான ஆதாரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.
* பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசியால் பெறப்பட்ட, இதற்கு முன்னர் வெளியிடப்படாத பல அறிக்கைகளை மக்கள் முன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
* ஆவணப்படத்தின் முதல் எபிசோட், இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்றது, பாரதிய ஜனதா கட்சியில் அவர் பெற்ற பதவிகள் உட்பட, ஆரம்பகட்ட அரசியலில் மோடி எடுத்து வைத்த எல்லா அடிகளையும் உன்னிப்பாக கண்காணித்து, ஆராய்ந்து எடுக்கப்பட்டது.
* குஜராத்தில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ரயில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டு, அதில் டஜன் கணக்கான இந்துக்களை எரித்துக் கொன்றது முதல், பிறகு நடந்த மதக்கலவரம் வரை மோடியின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
* திட்டமிட்டு நடந்த இந்தக் கலவரத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள், வன்முறையால் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். வன்முறையின் அளவு குறித்து அரசு சொன்னதை விட அதிக வன்முறை நடந்துள்ளது.
* கலவரத்தின் போது, மக்களைப் பாதுகாக்க முயன்ற போலிஸைப் பின்னுக்கு இழுப்பதிலும், இந்து தீவிரவாதிகளை மறைமுகமாக ஊக்குவிப்பதிலும் மோடி திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கான மிகத் தீவிரமான ஆதாரங்கள் உள்ளன.
* “இந்தக் கலவரத்தில் வன்முறையை செயல்படுத்திய யாருக்கும் தண்டனை விதிக்கப்படாத சூழலை உருவாக்கியதற்கு மோடி தான் நேரடிப் பொறுப்பு”, என்று இங்கிலாந்து அரசின் அறிக்கை கூறுகிறது. எனவே, முழுமையான ஆதாரங்களுடன் உள்ள இந்த ஆவணப்படத்தை உலகின் அனைத்து மக்களுக்கும் பிபிசி நிறுவனம் கொண்டு சென்று சேர்க்கும். இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.