உலக தடகள வீரர் உசேன் போல்ட் முதலீட்டு பணம் மோசடி!

உலக தடகள வீரர் உசேன் போல்ட் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வைத்திருந்த பணத்தில் 12.8 மில்லியன் டாலர் மாயமாகியுள்ளது.

உலகின் அதிவேகமான ஓட்டப்பந்தய வீரர் என்னும் சிறப்பை பெற்ற ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசேன் போல்ட். இவர், இங்கிலாந்து நாட்டின் கிங்ஸ்டனை தலைமையிடமாக கொண்ட பங்கு மற்றும் பங்குபத்திரங்கள் நிறுவனத்தில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளார். அவரது கணக்கிலிருந்து 12.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.98 கோடி) தற்போது காணாமல் போயுள்ளது. இப்போது அவரது கணக்கில் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. உசேன் போல்ட்டின் சேமிப்பு தொகையில் ஏறக்குறைய பெரும்பகுதி இந்த மோசடியில் பறிபோயுள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக உசேன் போல்ட்டின் முதலீடுகளை இந்த நிதி நிறுவனம்தான் கவனித்து வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் பணம் திரும்ப கிடைக்காவிட்டால் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் வழக்கறிஞர்.

இது உசேன் போல்ட் பணம் மட்டுமல்லாமல், அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த மேலும் 30 பேரின் கணக்குகளில் இருந்தும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதே நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் தான் இந்த மோசடி செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு உதவிய மற்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.