சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெருமளவில் பங்காற்றி வருகிறது என ரஷ்ய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், குடியரசு தின வாழ்த்துகளை தயவு செய்து ஏற்று கொள்ளுங்கள். பொருளாதார, சமூக, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பிற தளங்களில் இந்தியாவின் சாதனைகள் பரவலாக அறியப்பட்டவை. உங்களுடைய நாடு சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பெருமளவில் பங்காற்றி வருகிறது. இதேபோன்று மண்டல மற்றும் சர்வதேச செயல்திட்டங்களில் முக்கிய விவகாரங்களை பற்றி பேசுவதில் பெரும் பங்கு வகிக்கிறது என கூறியுள்ளார்.
நாம் இணைந்து பணியாற்றுவதன் வழியே அனைத்து துறைகளிலும், பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியை நாம் உறுதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யா மற்றும் இந்தியா என இரு நாடுகளின் நட்பு ரீதியிலான மக்களின் அடிப்படை நலன்களை சந்தேகமேயின்றி அது பூர்த்தி செய்யும் என்று ரஷ்ய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.