2047ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும்: ஆளுநர் ரவி

எதிர் வரும் 2047ம் ஆண்டில் அதாவது நாம் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பதில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களை ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர் மாணவர்களிடையே பேசியதாவது:-

தேசிய தலைநகரில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது பெருமையான விஷயம். நமது மாநிலத்தில் சுமார் 4 லட்சம் தேசியப்படை மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால் இதில் அனைவரும் குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்று அதனை சிறப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தேசிய மாணவர் படை மூலமாக நம்முடைய கூட்டு மனப்பான்மை வளரும். இதனால் நம்மால் ஏராளமான விஷயங்களை சாதிக்க முடியும். நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது.

சவால்கள்தான் நம்மை வளர்க்கும். எனவே சவால்களை எதிர்கொள்ள நாம் தயங்கக்கூடாது. சவால்களில் தோல்வியடைந்தாலும் அதன் மூலம் நம்மால் அனுபவங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்த அனுபவங்கள்தான் உங்களை வேறு ஒரு திசையில் மேலும் சிறப்பாக வழிநடத்தும். அந்த வகையில் இந்தியா தற்போது இந்த சவாலை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் 2047ம் ஆண்டு இந்தியா வல்லரசாக ஆகும். இதுதான் தற்போது நம்முடைய நாட்டின் சவாலாக இருக்கிறது. இந்த பயணத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். இப்படி நீங்கள் விரும்பி தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக வளர வேண்டும். அந்த வளர்ச்சி நாட்டையும் மேலும் வளர்த்தெடுக்கும். ஏனெனில் இந்தியாவை தற்போது உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. அந்நாடுகள் தங்கள் நாட்டின் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பதை நம்மை பார்த்து கற்று வருகின்றன. நம் நாட்டின் இந்த தலைமை பண்புக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் ஜி 20 மாநாட்டில் தலைமை வகிக்கும் வாய்ப்பு. இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் GDP-ஐ ஒட்டுமொத்த உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் 85 சதவிகிதமாகும்.

இவ்வளவு சக்தி வாய்ந்த நாடுகளின் ஒன்றிணைத்து இந்தியா மாநாடு நடத்துகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை எதிர்பார்த்து வரும் சூழலில் அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. தற்போது இந்தியாவை யாரும் வளர்ந்து வரும் நாடாக பார்க்கவில்லை. வளர்ந்த நாடாகதான் பார்க்கிறார்கள். அந்த வகையில் உலக நாடுகளில் நிகழும் நிகழ்வுகளில் இந்தியாவின் பங்கு பிரதானமானதாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் சமீப ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.

உலகமே பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சி சீராக இருக்கிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் பெரிய அளவில் கனவு காணுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் நீங்கள் சிறந்து விளங்குங்கள். அதற்காக உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு இருந்தால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.