பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம்: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை திரும்ப பெறமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து பாஜக தனது முடிவை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுகிறார்.

அது போல் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார் என ஓபிஎஸ் நேற்றைய தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுகிறார். இவர் லண்டனில் படித்தவர். இவர் அந்த தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சசிகலா ஆதரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆதரவு அளிக்குமாறு கோருவதற்காக சசிகலாவை சந்திப்பேன். பாஜக தேசிய கட்சி, அக்கட்சிக்கு நாம் அழுத்தம் கொடுக்க முடியாது. எனவே ஓரிரு நாளில் முடிவை அறிவிக்கட்டும். ஒரு வேளை பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாவிட்டால் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார். இரட்டை இலை சின்னம் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் அவர் சுயேச்சை சின்னத்திலாவது போட்டியிட்டு வெற்றி பெற முனைப்போடு இருக்கிறோம். ஒரு வேளை பாஜக போட்டியிடுவதாக அறிவித்துவிட்டால் நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டு பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார். அதாவது வேட்பாளரையும் அறிவித்துவிட்டு வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்ற ட்விஸ்ட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. இந்தத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜகவிடம் நாங்கள் ஆதரவு கேட்டோம். அவர்களும் யோசித்து சொல்வார்கள், எனவே நாங்கள் இன்றே சொல்லுங்கள் என கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

அப்போது “பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை நாங்கள் திரும்ப பெறுவோம் என ஓபிஎஸ் கூறியுள்ளாரே, அது போல் நீங்களும் திரும்ப பெறுவீர்களா” என செய்தியாளர்கள் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம் என்பதை முன்வைத்த காலை பின்னே வைப்பது இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிருபர் ஒருவர் அப்போ உங்கள் கூட்டணியில் பாஜக இல்லையா என கேட்டார். அதற்கு ஜெயக்குமார் மீண்டும் “முன் வச்ச காலை பின் வைப்பதில்லை” என ஜெயக்குமார் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு புறப்பட்டார்.