மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும்: வெள்ளை மாளிகை!

பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும் என்று தெரிவித்தார்.

உக்ரைன் போர் விவகாரத்தை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தாமதமாகிவிட்டாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜான் கிர்பி, “உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். இவை அனைத்தையும் அமெரிக்கா நிச்சயம் வரவேற்கவே செய்யும். போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். போர் மேலும் தொடராமல் நிறுத்த முடியும். போர் எங்களுக்கு முடிவுக்கு வந்தால் போதும்.

உக்ரைனில் மக்கள் மிகவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது அனைத்துக்கும் காரணம் ரஷ்ய அதிபர் புதின். அவரால் மட்டுமே இந்த போரை நிறுத்த முடியும். ஆனால், போரை நிறுத்துவதற்குப் பதிலாக அவர் தொடர்ச்சியாக உக்ரைனில் இருக்கும் எனர்ஜி உள்கட்டமைப்பை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறார். ஒட்டுமொத்த உக்ரைன் நாட்டையும் இருளில் தள்ள வைக்க முயல்கிறார். இதனால் உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இதை எல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். எப்போது பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதை அதிபர் ஜெலென்ஸ்கி தான் முடிவு செய்ய வேண்டும். அவரால் மட்டுமே அதை வலிமையான கையால் செய்ய முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் பேசியுள்ளார். இந்த நூற்றாண்டு போருக்கான காலம் இல்லை என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா ஊடகங்களும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முயற்சியைப் பாராட்டியிருந்தன.