சீனாவின் வான் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 10 உளவு பலூன்கள் பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அருகில் பெரிய பலூன் ஒன்று பறந்தது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமெரிக்காவை உளவு பார்க்க சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் என அமெரிக்கா கூறியது. அதுமட்டுமின்றி பலூனில் சென்சார், கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலூனாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது அதைத் தொடர்ந்து இரண்டாவது பலூனும் தென்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்த முடிவு செய்தது.
இதுபற்றி சீன பாதுகாப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது வானிலையை ஆய்வு செய்ய பறக்க விடப்பட்டது என்றும், அதிக காற்றின் காரணமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து விட்டதாகவும் சீனா விளக்கம் அளித்தது. ஆனால் அமெரிக்கா அதனை ஏற்காமல் சுட்டு வீழ்த்தியது. பலூனின் பாகங்கள் கடலில் விழுந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரிதும் வைரலானது. இந்த சம்பவம் சீன தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. உடனே அந்த பலூனை மீட்க கடற்படையை அமெரிக்கா அனுப்பியது. இந்த பலூனை ஆய்வு செய்வதன் மூலம் வானில் இருந்தபடியே கண்காணிக்கும் சீனாவின் தொழில்நுட்ப வசதிகள், அதன் வடிவமைப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்கா தரப்பு கருதுகிறது. ஆனால் சீனாவின் பலூன் அமெரிக்கா செல்வதற்கு முன்னால், சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதன் வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன் பறந்தது. இது சீனாவை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய பலூன் என சீனா குற்றம்சாட்டியது. அதற்கு எதிர்வினையாக அமெரிக்காவின் வான் பகுதியில் சீன பலூன் பறக்கவிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் கடந்த 11ம் தேதி வட்டமடித்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இந்தநிலையில் சீனாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அமெரிக்காவை, சீனா கடுமையாக சாடியுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், “ஜனவரி-2022 தொடக்கத்தில் இருந்து, 10 முறைக்கு மேல் அமெரிக்காவின் பிரம்மாண்டமான பலூன்கள் அனுமதியின்றி சீனாவின் வான்வெளியில் பறந்துள்ளன. இத்தகைய சம்பவங்களுக்கு சீனாவின் பதிலடி பொறுப்பு மற்றும் தொழில்முறை சார்ந்ததாக இருந்தது. ஆனால் அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது அதன் வெறுப்பு மற்றும் ஏகாதிபத்திய மனநிலையை காட்டுகிறது. மற்ற நாடுகளின் வான் எல்லைக்குள் அமெரிக்கா சர்வ சாதரணமாக செல்கிறது. அதைக் கேட்க யாரும் இல்லை என்பதை நாங்கள் மாற்றுவோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.