தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு மருத்துவ கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. ஆனால் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகளை தென்காசி மாவட்ட எல்லைகளில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாநில எல்லையோர மக்களுக்கு பல்வேறு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே கேரள மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறையின் முதன்மை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பிற பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுகிறது. கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.