ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும்: அமைச்சர் பொன்முடி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மறுபக்கம் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்ன வழக்கு உள்ளிட்ட நீதிமன்ற விவகாரங்களை முடித்து, அதிமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இருதரப்பும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்கள் பலரும் ஈரோட்டிலேயே முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து மசூதியில் இருந்து வெளிவரும் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். இதன் பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அனைத்து சமுதாய மக்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கின்றனர். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்போர், டெபாசிட் இழக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். நிச்சயம் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெறுவார். ஏற்கனவே சொல்லியது போல் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் இந்த தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால் அதிமுகவினர் பொய்யான பரப்புரைய மேற்கொண்டு வருகிறார்கள். தோல்விக்கான காரணத்தை சொல்லும் வகையில் பேசி வருகிறார்கள். எந்த வேலையையும் அதிமுக செய்யாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர்கள் போட்டிப் போட்டு பணம் கொடுப்பதாக அதிமுக முன் வைத்த குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, அதிமுகவினர் அப்படிதான் சொல்லுவார்கள். ஏனென்றால் பணம் கொடுக்க அதிமுக தான் முயற்சித்து வருகிறது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. ஈரோடு மாவட்டத்திற்கும் எதுவும் செய்யவில்லை. உள்ளூரிலேயே அவர்களுடன் சென்று வாக்கு சேகரிக்க ஆளில்லை. ஆனால் திமுக உள்ளூர் மக்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறது. மக்களை அடைத்து வைத்திருப்பதாக சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்.