அமெரிக்காவின் மிசிசிப்பி நகரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் உயிருடன் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனைவருக்கும் சட்டப்பூர்வ அனுமதி இருக்கும் நிலையில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 600க்கும் அதிகமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இங்கு பதிவாகியுள்ளது. 2020ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 45,222 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவமும் இடம் பிடித்திருக்கிறது. அதாவது மிசிசிப்பியின் டேட் கவுண்டியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மிசிசிப்பியின் டேட் கவுண்டியில் உள்ள அர்கபுட்லா அணை சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்ட சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து டேட் கவுண்டி ஷெரிப் பிராட் லான்ஸ் கூறுகையில், “எங்களுக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. எனவே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். துப்பாக்கியால் சுட்ட நபரை யாரும் சரியாக பார்க்கவில்லை. ஆனால் சத்தம் மட்டும் வந்துக்கொணடே இருந்துள்ளது. இது போன்ற தாக்குதல்கள் பொதுவெளியில்தான் நடக்கும். ஆனால் இந்த முறை வீடு புகுந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே சந்தேக நபரை யாராலும் சரியாக பார்க்க முடியவில்லை. சுமார் 30 நிமிடங்கள் வரை துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. இதனையடுத்து நாங்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு பின்னர் சுமார் 5 சடலங்கள் வெவ்வேறு வீடுகளிலிருந்து கண்டெடுத்துள்ளோம். மொத்தமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர் தனியாகதான் செயல்பட்டிருக்கிறார். இந்த கொலைக்கான நோக்கம் என்ன என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.