ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாக்காளர்களை அரசியல் கட்சியினர் அடைத்து வைத்திருப்பதாக கூறி அப்பகுதிக்கு சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் அங்கிருந்து நேரலை செய்ய தொடங்கினர். அப்போது அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த காட்சி நேரலையிலேயே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் மும்முரமாகியுள்ளது. பல்வேறு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று (21-02-2023) செவ்வாய்க்கிழமை காலை “ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் பகுதியில் KNK சாலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பகுதி வாக்காளர்களை மக்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளனர்.” என்ற தகவல் கிடைக்கப் பெற்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். செய்தி சேகரிக்கும் பணியில் இருக்கும் போதே அந்த செய்தி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது அடையாளம் காணக்கூடிய அரசியல் கட்சியினர் செய்தியாளர் ராஜேஷ்குமாரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோசமான தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்திட தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைகளை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியுள்ள திமுகவினரின் கொலைவெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆடு, மாடுகளைப்போல மக்களை அடைத்து வைத்து, அவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பறித்து, மக்களாட்சி முறைமையையே குழிதோண்டிப் புதைக்கும் ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்குதான், தற்போது உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது. திமுக குண்டர்கள் ஊடகவியலாளர்களையே மிரட்டித் தாக்குகிறார்கள் என்றால், அப்பாவிப் பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார்கள்? என்பதைத் தேர்தல் ஆணையம் இனியாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆளும் திமுகவினரின் இத்தகைய சனநாயக விரோதச் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், ஊடகவியாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.