ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: பிரேமலதா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறோம். தே.மு.தி.க.வின் 18 ஆண்டு கால அரசியலில் எத்தனையோ தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஆனால் இந்த மாதிரி ஒரு தேர்தலை நாங்கள் பார்த்ததே இல்லை. திராவிட மாடல் என்பதை அங்கு தான் பார்த்தோம். தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது, இலவசமாக பொருட்கள் கொடுப்பது எல்லா தொகுதிகளிலும் நடக்கும் ஒரு விஷயம். ஆனால் ஆடு, மாடுகளை அடைப்பது போல் பட்டறைகளில் மக்களை காலை முதல் இரவு வரை அடைத்து வைக்கின்றனர். பின்னர் இரவில் வெளியேறும் போது ரூ.500 கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். தேர்தல் அறிவித்த நாள் முதல் இன்று வரை இதுபோன்று நடந்து கொண்டு தான் உள்ளது. ஒரு கிளியை அடைத்து வைத்ததற்கு ரோபோ சங்கருக்கு ரூ.2½ லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் இத்தனை ஆயிரம் மக்களை அடைத்து ஓட்டு வாங்குகின்றனர். 2 ஆண்டு காலத்தில் தி.மு.க. நல்லது செய்திருந்தால் அதை வைத்து வாக்கு சேகரித்திருக்கலாம்.

இன்றைக்கு திராவிட மாடலை தெளிவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பார்த்து கொண்டிருக்கிறோம். மக்களை பட்டறையில் அடைத்து வைப்பது தான் திராவிட மாடல். ஆட்சி பலம், அதிகார பலம், பணபலம் உள்ளவர்களுக்கான தேர்தல் என்றால் அவர்களை மட்டும் வேட்பாளராக அறிவித்து, அவர்களை ஜெயித்ததாக அறிவித்து விடலாம். தேர்தல் ஆணையம், போலீஸ் துறை, நீதிபதிகள் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு மக்கள் அனைவரும் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர். தேர்தலால் 100 கோடி ரூபாய்க்கு நெசவு தொழில் உள்பட அனைத்து தொழில்களும் ஈரோட்டில் முடங்கி உள்ளன. ஈரோடு கிழக்கு தேர்தலில் அறத்தோடு வாக்களித்தால் தே.மு.தி.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.