மம்தா தனித்து போட்டி – பாஜக சர்ப்ரைஸ்-காங்கிரஸ் ஷாக்

பாஜக சர்ப்ரைஸ், காங்கிரஸுக்கு கல்தா

2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும், பாஜக கூட்டணி தொடர்ந்து இரு முறை ஆட்சியமைத்துள்ள நிலையில் மக்கள் மூன்றாவது வாய்ப்பு வழங்குவார்களா, பாஜக அணியை வீழ்த்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு முக்கிய காரணம் எதிர்கட்சிகள் ஓரணியில் திரளாததே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மூன்று அணிகள் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி 2014ஐவிட சிறப்பான வெற்றியை பாஜக பெற்றது.

2019இல் நடந்த தவறை இனி நடக்க கூடாது, உள் முரண்களை மறந்து பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்தித்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். இதை ஏற்பதில் பிற கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களுக்கு பலவீனமடைந்த காங்கிரஸை தூக்கிப் பிடிக்க வேண்டாம் என்ற எண்ணம் இருக்கிறது.

நாட்டை அதிக முறை ஆண்ட கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை சரி செய்து கொள்ளாததன் விளைவாக பல மாநிலங்களில் பின்னடைவை சந்தித்தது. பிராந்திய நலனுக்கு முன்னுரிமை கொடுக்காததால் அக்கட்சியே பல மாநிலங்களில் உடைந்து புதிய பிராந்திய கட்சிகள் உருவாகின. வெவ்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்ட அத்தகைய கட்சிகள் சிறியதும் பெரியதுமாக 60க்கும் மேல் இருக்கும். அப்படி உருவான கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ், மம்தா பானர்ஜி தொடங்கிய அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், புதுச்சேரியில் என்.ரங்கசாமி தொடங்கிய என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறு காங்கிரஸிலிருந்து உருவான கட்சிகள் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதில் தயக்கம் காட்டுகின்றன. இவர்களில் பிற கட்சிகள் தங்கள் மாநிலங்களில் வலிமையாக இருந்தால் போதும் என்று நினைக்கும் போது மம்தா பானர்ஜியோ தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் இடத்தை பிடிக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.

இதனாலே மேற்கு வங்கம் மட்டும் அல்லாமல் அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி தொடங்கியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் இந்த மாநிலங்கள் சிலவற்றில் தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.

தற்போது நடந்து முடிந்துள்ள மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரிணாமூல் குறைந்தது 12 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது 10 இடங்களில் முன்னிலையில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் இறுதியில் 5 இடங்களை கைப்பற்றியது.

மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “ஆறு மாதங்களுக்கு முன்புதான் இம்மாநிலத்தில் பணியை தொடங்கினோம். தற்போது 15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளோம். இந்த வெற்றி எனது கட்சியின் தேசிய அந்தஸ்துக்கு உதவும். நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் 2024 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய போது, “2024-ல் திரிணாமுல் கட்சி மக்களுடன் தான் கூட்டணி அமைக்கும். மற்ற எந்த அரசியல் கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணியில் இணைந்து செல்ல மாட்டோம். மக்கள் ஆதரவுடன் தனித்து போட்டியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

ஒற்றை எதிர்கட்சி அணியை உருவாக்க நினைக்கும் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மம்தாவின் இந்த அறிவிப்பு, பாஜக அணியினருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மம்தாவை பின் தொடர்ந்து வேறு சில எதிர்கட்சிகளும் காங்கிரஸுடன் இணைந்து செல்லவில்லை என்றால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்கு போடுகின்றனர்.

மம்தா 2024 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்தால் அவரை பின் தொடர்ந்து தெலங்கானா கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்டவர்களும் வர வாய்ப்புள்ளது. அப்படி வலுவான கூட்டணி உருவானால் பாஜகவுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும். ஆனால் மம்தாவோ இந்த ஒரு தேர்தலுக்காக அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டாம். தனித்து களம் கண்டு கவனம் ஈர்த்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் திரிணாமூல் கட்சி காங்கிரஸ் இடத்தை பிடித்துவிடும் என்று திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

தனித்து போட்டி என்று பாஜகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் மம்தா பானர்ஜி 2024 மக்களவைத் தேர்தலில் முதல் ஆளாக பரபரப்பை கூட்டியுள்ளார்.