ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும்: ஐ.பெரியசாமி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் என்று மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வருகை தந்தார்கள். தொடர்ந்து., மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 8ஆவது நாளாக போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டம் செய்வது குறித்து ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் பேசி முடிக்கப்படும் வட மாநிலங்களில் இருக்கக்கூடிய தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் பால் உற்பத்தியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பேசிய அவர், “இது மக்கள் நல பட்ஜெட். எல்லா தரப்பு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ள பட்ஜெட்” என்றார்.

திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளது என அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அண்ணாமலை சொல்வது எதுவும் உண்மை அல்ல. ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக முதல்வர் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் நிறைவேற்றி இருக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வதற்கு ஆயிரம் மடங்கு உறுதியாக தமிழக அரசு உள்ளது” என்று கூறினார்.

ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ராகுல் காந்தி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது நிச்சயமாக சத்தியம் வெல்லும்” என்றார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வந்தாலும் ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடினால் திமுக அரசு என்ன செய்ய முடியும் என அண்ணாமலை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு அமைச்சர் பெரியசாமி, “எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும், கவலைப் படவேண்டாம். நிச்சயமாக தடுப்போம்” என்றார்.