ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் குழந்தையை தாக்கியதாக கூறி கடந்த 21ம் தேதி குழந்தையின் குடும்பத்தினர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆசிரியர் ஒருவரை காலணியால் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.

அதே சமயம் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி, பள்ளிக்குள்ளேயே நுழைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தாக்குதல் சம்பவங்களில் இருந்து ஆசிரியர்களை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்கும் ஆசிரியர்களை நாம் கடவுளாக போற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.