“பெரியாரைப் போலவே சமூக நீதிக்காக பாடுபட்ட அய்யா வைகுண்டர் குறித்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளா அரசோடு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இவை அனைத்தையும் நான் வரவேற்கிறேன். தந்தை பெரியாருடைய லட்சியத்தையும் சமத்துவத்தையும் பெண் விடுதலைக்கான குரலையும் எங்கெல்லாம் சாதிய தீண்டாமைகள் சாதிய இழிவுகள் இருந்ததோ அதை அத்தனையும் துடைப்பதற்கு காரணமாக இருந்த தந்தை பெரியாரை போற்றுகிற, வணங்குகிற தமிழ் சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்ற இந்த மகத்தான பகுதியை விதி 110க்கும், அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதே சமகாலத்தில் 1924, 1925-ல் தோள் சீலை போராட்டம் என்கிற போராட்டத்தை அறிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த ஐயா வைகுண்டர் மிகப்பெரிய புரட்சியை அந்த மண்ணில் படைத்தார்கள். நம்முடைய பெண்கள் மார்பை மறைத்துக் கொள்வதற்கு அனுமதி இல்லை என்றும் மார்புகளை மறைத்து தோள் சீலை அணிவதற்கு உரிமை இல்லை என்றும் அங்கு ஒரு சாதிய ஆதிக்க கொடுமைகள் இருந்தது. மார்பை மறைப்பவர்களுக்கு தண்டனை விதிப்பது, அபராதம் விதிக்கிற கொடுமை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்து நம்முடைய வீர தமிழச்சிகள் மார்பை அறுத்தெறிந்து போராடி இருக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ இது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கான போராட்டம் என்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. அதனால் நான் தமிழக முதலமைச்சரிடம், “ஐயா வைகுண்டரும், தந்தை பெரியாரைப் போல் சமூக நீதிக்காக போராடியிருக்கிறார். சாதிய தீண்டாமைக்கு எதிராக போராடி இருக்கிறார், தோள் சீலை போராட்டத்திற்கு எதிராக போராடியிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்துவதற்கு எதிராக போராடி இருக்கிறார். ஆதலால் தந்தை பெரியாரைப் போற்றுகிற வணங்குகிற நாம் அய்யா வைகுண்டரையும் போற்ற வேண்டும். வரலாற்றில் இளைய தலைமுறைக்கு மாணவர் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்கிற கோரிக்கையை முதலமைச்சரிடம் முன்வைத்து இருக்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு ஐயா வைகுண்டர் குறித்தும் எதிர்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்ற நல்வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச முயற்சித்தபோது பேரவை தலைவர் விரிவாக பேச வாய்ப்புத் தராததால் முதலமைச்சர் காதுக்கு கண்டிப்பாக முழுவதுமாக போய் சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் இதை தெரிவிக்கிறேன். பாடத்திட்டங்கள் மூலம் வைகுண்டர் பெருமை தமிழ் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும். வரலாற்றில் போற்றுக்குரியவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.