தென்கொரியாவுடன் தகவல் தொடர்பை துண்டித்த வடகொரியா!

தென்கொரியாவுடனான நேரடி தகவல் தொடர்பை வடகொரியா மீண்டும் துண்டித்துள்ளது. அமெரிக்காவின் கைப்பாவையாக தென்கொரியா செயல்படுவதாக வடகொரியா சாடியுள்ளது.

1950-களில் நடந்த கொரிய போரின் போது வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான பகைமை நிலவி வருகிறது. எனினும் அவ்வப்போது இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை எடுப்பதும், பின்னர் அது கைவிடப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு இருநாடுகளின் எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தகவல் தொடர்பு அலுவலகம் அமைக்கப்பட்டு, இருநாடுகள் இடையே அரசு நிலையிலான நேரடி தொலைபேசி இணைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தப்பி சென்றவர்கள் வடகொரியாவுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் அடங்கிய ஹீலியம் பலூன்களை வடகொரியாவுக்கு அனுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த வடகொரியா தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்ததுடன், தென்கொரியாவுடனான நேரடி தொலைபேசி இணைப்பை துண்டித்தது. எனினும் ஓர் ஆண்டுக்கு பின்னர் வடகொரியா-தென்கொரியா இடையே தகவல்தொடர்பு மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் அண்மைகாலமாக தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டுப்போர் பயிற்சியை கைவிடும்படி இருநாடுகளையும் வடகொரியா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் தென்கொரியாவுடனான நேரடி தகவல் தொடர்பை வடகொரியா மீண்டும் துண்டித்துள்ளது. கடந்த 4 நாட்களாக தென்கொரியா அரசின் அழைப்பை வடகொரியா தரப்பு ஏற்கவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும் அண்டை நாடான தென்கொரியா அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், தங்களுக்கு துரோகம் செய்வதாகவும் வடகொரியா அரசு சாடியது.