சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர பிற நேரங்களில் உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி ராஜா தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வழக்கறிஞர் அனைவரும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா பேசுகையில், “3 – 4 நீதிபதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கறிஞர்கள் கோர்டில் வாதிடும்போது முகக் கவசத்தை நீக்கிக் கொள்ளலாம். மற்ற சமயங்கள் நீதிமன்ற விசாரணை கூடங்களில் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிமன்ற விசாரணை நடத்தும் வாய்ப்புகள் உள்ள நிலையில், ஏன் இத்தனை வழக்கறிஞர்கள் கூட்டமாக நீதிமன்றத்துக்கு வருகிறார்கள்? விசாரணைக் கூடங்களில் கூட்டமாக நிற்கிறார்கள். நீதிமன்றங்களுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணை நடத்தப்படுகிறது.” என்றார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,866 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,195 ஆக அதிகரித்து இருக்கிறது. இன்று கொரோனாவால் குணமடைந்து 366 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். சென்னையில் 138, கோவையில் 55, கன்னியாகுமரியில் 50, செங்கல்பட்டில் 26 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.