வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்பது குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் வேங்கை வயல் என்ற கிராமத்தில் கடந்தாண்டு பட்டியலின மக்களுக்குத் தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் குடிக்கும் நீர், உணவு குறித்துக் கேட்டுள்ளனர். அப்போது வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு இருப்பதைக் கண்டறிந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதைக் கண்டித்து மாநிலம் முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தீண்டாமை குறித்துப் பேசும் நாம், எதற்காக ஒரே கிராமத்தில் இரண்டு மேல்நீர் தொட்டிகளை வைக்க வேண்டும் என்றும் பலரும் சாடினர். இதைக் கண்டித்து மாநிலத்தில் பல அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
வெள்ளனூர் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக 75 பேரிடம் விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போதிலும், யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் அழுத்தம் அதிகரித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க முயல்வதாகவும் தகவல் வெளியான நிலையில், அது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்தும் சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சர் ரகுபதி: வேங்கை வயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏன் என்று விசிக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ரகுபதி முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். அதாவது வேங்கை வயல் ஒரு குக்கிராமம் என்றும் இந்தச் சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே வேங்கை வயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தே வருவதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.