அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்!

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக தற்போது பதவி வகித்து வரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து 2024 நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப், அதற்கான பிரசாரங்களையும் தொடங்கிய நிலையில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். டிரம்ப்பை எதிர்த்து குடியரசு கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலேவும், தொழிலதிபர் விவேக் ராமசாமியும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் தேர்தல் களம் தற்போதே சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த அதிபர் பைடன் அதனை தற்போது வீடியோ பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வௌியிட்டுள்ள வீடியோவில், “ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்துக்காக எழுந்து நிற்க வேண்டிய தருணம் உண்டு. இதுதான் நமக்கான கொள்கை என்பதால் நான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.