ஆஸ்திரேலியாவில் 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜ பிரமுகர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர் என்பவர் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பாஜவின் நண்பர்கள் அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர். கடந்த 2018ம் ஆண்டு அவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பல பெண்களுடன் பாலேஷ் தன்கர் உடலுறவு கொள்ளும் டஜன் கணக்கான வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோவில் இருந்த பெண்களில் சிலர், சுயநினைவின்றி போதையில் இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் கொரிய நாட்டின் பெண்களாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டது.

ஐந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியதாக பாலேஷ் தன்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர், போதைப்பொருட்களை பயன்படுத்தி பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், டேட்டிங் இணையதளம் மூலம் அவர்களை வரவழைத்து உல்லாசமாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5 கொரிய பெண்களை தாக்கியும் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வேலைதேடி வரும் கொரிய பெண்களை தனது வலையில் சிக்கவைத்து பாலியல் மோசடிகளை செய்துள்ளார்.

அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த ஒயின் அல்லது ஐஸ்கிரீமைக் கொடுத்து தனது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார். தட்டிக்கேட்ட பெண்களை தாக்கியுள்ளார். மேலும் தனது படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த அலாரம் கடிகாரத்தில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் பெண்களிடம் உல்லாசமாக இருக்கும் காட்சிகளையும், அவர்களை தாக்கும் காட்சிகளையும் பதிவு செய்துள்ளார். அந்த ஆவணங்களின் அடிப்படையில், பாலேஷ் தன்கர் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது. அவருக்கான தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.