அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த ரெய்டு காலை தொடங்கி இப்போது வரை தொடர்ந்து வருகிறது. கரூர், சென்னை, கோவை மட்டுமின்றி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதற்கிடையே சில இடங்களில் வருமான வரித்துறைக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவமும் நடந்தது.
வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில், இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக தேர்தலில் பணத்தைக் குவித்தும் பாஜக தோல்வியைத் தழுவியது. கர்நாடகா தேர்தலுக்குப் பிரதமர் மோடி இதுவரை இல்லாத வகையில் பிரசாரம் செய்தார் இருப்பினும் தோல்வி அடைந்தார்கள். அந்த தோல்வியை மறைக்க 2000 நோட்டுகளை வாபஸ் பெற்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அண்ணாமலை திட்டமிட்டு டாக்கெட் செய்து வருகிறார்.. எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இதைப் பார்த்து அஞ்சப்பட்டோம்.. செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார்.. தமிழகத்திற்கு வரும் முதலீடு செய்திகளை மழுங்கடிக்கும் விதமாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. மாநில போலீசாருக்கு சொல்லாமல் ரெய்டு நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.. திமுகவுக்குக் களங்கம் ஏற்படுத்தவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் ரெய்டு நடத்தியுள்ளனரோ எனச் சந்தேகம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.