ஆளுநர் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்வது அவருக்கு நல்லது: அமைச்சர் பொன்முடி!

ஆளுநர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தனிப்பட்ட விருப்பம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநில கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 19 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். துணை வேந்தர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

மாநில அரசை ஆலோசிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். ஆளுநர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம். தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சில விஷயங்களை செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் முறையிடப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலுமே அந்தந்த மாநில கல்விக் கொள்கையை வகுத்து வருகின்றன. கர்நாடகாவிலும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்துள்ளது அம்மாநில அரசு. ஆளுநர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு சமயத்தில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் தனித்தனியாக அறிவிக்கப்படுகின்றன. இது மாணவர்கள் கல்லூரி மாறும்போது பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே வேறு இடங்களில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காக வருகிற காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுவது போல, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.ஒரே நேரத்தில் தேர்வு, ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் முதுநிலை உயர்கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும்.

மொழிப்பாடங்களுக்கு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும். பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்யலாம். முதுகலை மாணவர் சேர்க்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். மாணவர்கள் படிக்கும் போது வேலைவாய்ப்பு அளிப்பது தான் நான் முதல்வன் திட்டம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம். பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டால் அங்கு சேர்ந்துவிடுவார்கள். அப்படி செல்லும் மாணவர்கள், நாங்கள் தனியார் கல்லூரியில் பணம் கட்டிவிட்டால் அதை திரும்ப தர மறுக்கிறார்கள், மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள் என புகார்களை முன்வைக்கின்றனர். எந்த தனியார் அல்லது அரசு கல்லூரியாக இருந்தாலும், மாணவர்கள் சேர்ந்தபிறகு, அவர்கள் வேறு கல்லூரிகளில் சேர விரும்பினால், அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் கட்டிய பணத்தையும், மாற்றுச் சான்றிதழையும் திரும்ப தர வேண்டும் என துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.