ராகுல் காந்தியின் மேல்முறையீடு தள்ளுபடி…2 ஆண்டு சிறை தண்டனை உறுதி

ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிதைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

2019-இல் கா்நாடக பிரசாரத்தில் பேசிய ராகுல், ‘எப்படி அனைத்து கொள்ளையா்களும் மோடி என்ற பொதுவான துணைப்பெயரைக் கொண்டுள்ளனா்?’ என்றாா்.

மோடி சமூகத்தினரை ராகுல் இழிவுபடுத்தியதாக குஜராத்தின் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி தொடுத்த வழக்கில், சூரத் விசாரணை நீதிமன்றம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி ராகுலுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ராகுலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தண்டனைக்கு தடைக் கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்ய மனுவை கடந்த மே மாதம் விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், தண்டனைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டு, கோடை விடுமுறைக்குப் பிறகு உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ராகுல் மனு மீது தீா்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கின் வழக்கு விசாரணைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ள நீதிபதி ஹேமந்த் பிரச்சக், 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.