ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக மாநாட்டுக்கு வந்த உலகத் தலைவர்களைப் பிரதமர் மோடி வரவேற்று அரங்குக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து மாநாட்டில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை இணைக்கும் நிகழ்வு நடந்தது. ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததால் ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக ஜி-20 கூட்டமைப்பு மிகப் பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது.
முன்னதாக ஜி-20 மாநாட்டுக்கு வருகைதந்த ஆப்பிரிக்க யூனியனின் பிரதிநிதியை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவி பாரத் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றது கவனம் பெற்றது. மாநாடு தொடங்கியவுடன் மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கை முன்னர் பாரத் என்று பெயர்ப் பலகை இருந்தது கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு பதிலாக அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரத் என்ற பெயரை ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரபூர்வ ஆவணங்களில் அரசு பயன்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முழுமையான விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்ட முடிவு என அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அளிக்க இருக்கும் ஜி20 விருந்துக்கான அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்தது.
இதன் தொடர்ச்சியாக, வரும் 18-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இது நாட்டை பெருமைப்படுத்தும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் பதில் அளித்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி தெரிவிக்கும் கருத்துகளால் இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து, டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரத் – இந்தியா சர்ச்சையில் இருந்து விலகியிருக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பெயர் மாற்றம் தொடர்பான வாதப் பிரதிவாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை முதல்முறையாக பிரதமர் தனது அமைச்சர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்தப் பின்புலத்தில், இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது மீண்டும் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
