டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதுடெல்லி ஜி20 தலைவர்களின் பிரகடனம் ஏற்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடனும் எண்ணத்துடனும் இந்தப் பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறந்த, வளமான மற்றும் இணக்கமான எதிர்காலத்துக்காக ஒத்துழைப்போம் என்று உறுதியளிக்கிறோம். அனைத்து G20 உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த பிரகடனத்தை மத்திய அரசு சார்பிலான குழு தயாரித்து, அதனை உறுப்பு நாடுகளின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. அனைத்து நாடுகளும் இந்தப் பிரகடனத்துக்கு ஒப்பதல் அளித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி20 மாநாட்டின் முக்கிய நிர்வாகியான அமிதாப் காந்த், “பிரகடனம் 83 பாராக்களைக் கொண்டது. இதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை, அடிக்குறிப்புகள் இல்லை. புதுடெல்லி தலைவர்கள் பிரகடனம் இணையற்ற உலகளாவிய ஒருமித்த கருத்தை குறிக்கிறது. புதுடெல்லி தலைவர்கள் பிரகடனம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அனைத்து வளர்ச்சி மற்றும் புவி அரசியல் பிரச்சினைகளிலும் 100% ஒருமித்த கருத்துடன் செல்வதற்கான பிரகடனம் இது. இன்றைய புதிய புவிசார் அரசியல் உலகில், பூமி, மக்கள், அமைதி மற்றும் செழிப்புக்கான சக்திவாய்ந்த அழைப்பு. இன்றைய உலகின் தலைவரான பிரதமர் மோடி இதை நிகழ்த்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அமிதாப் காந்த், “இந்தப் பிரகடனம் பெருமளவில் பெண் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டது. பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு, பெண்களுக்கான உணவு பாதுகாப்பு, அவர்களின் நலம் ஆகியவற்றுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதையோ, அணு ஆயுத மிரட்டல்களையோ ஏற்க முடியாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா தலைமை ஏற்று நடத்துவதையடுத்து கடந்த ஓராண்டாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் என்பது நடந்து வந்தது. இதேபோல் ஜி20 உச்சி மாநாட்டை டெல்லியில் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி திட்டமிட்டப்படி ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றே பிற நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர்.

அமெரிக்க அதிரபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஏராளமான தலைவர்கள் மாநாட்டுக்காக வருகை தந்துள்ளனர். இதையடுத்து இன்று ஒவ்வொரு தலைவர்களும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபத்துக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி கைக்குலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார். ஜி20 மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ‘ஜி20 பிரகடனம்’ உறுப்பு நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய பிரதமர் மோடி, “மாநாட்டின் கருப்பொருளான “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன.

* பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* அணு ஆயுதங்களை பயன்படுத்துவதையோ, அணு ஆயுத மிரட்டல்களையோ ஏற்க முடியாது.

* உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இலக்கு.

* புவிசார் அரசியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தளமாக ஜி20 அமைப்பு இல்லை.

* அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* சர்வேத அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறத்தலாக உள்ளது.

* பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதலை 2030-க்குள் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த தீர்மானம். போன்ற தீர்மானங்கள் ஜி 20 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.