தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதற்கு சோனியா-ராகுலே காரணம்: ஜே.பி.நட்டா!

ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி “சனாதனம்” பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசி வருவதற்கு சோனியாவும், ராகுலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

இண்டியா கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடந்து முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு ஆதரவாகவும் சனாதன தர்மத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பேசுகிறார். சனாதன தர்மத்துக்கு எதிராக இண்டியா கூட்டணி உருவாகி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் இது.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும், சோனியா மற்றும் ராகுலும் தங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். எந்த ஒரு மதத்தைப் பற்றியும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை வெளியிட அரசியலமைப்பில் உரிமை உள்ளதா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அல்லது அரசியலமைப்பின் விதிகள் பற்றி இண்டியா கூட்டணிக்குத் தெரியாதா?

சனாதன தர்மத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் கடைகளில் அன்பு என்ற பெயரில் வெறுப்பை ஏன் விற்கிறார்கள்? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இயங்கும் வெறுப்பு மெகா மால் அது. மக்களைப் பிரித்து ஆள்வதுதான் அதன் நோக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.