சேகர் பாபு எதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்: அண்ணாமலை

சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு வார்ததை கூட கண்டிக்காமல் இருந்த சேகர் பாபு எதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதற்காக அவரை கைது செய்யக் கோரி தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, கோவை மேற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அண்ணாமலையும், பாஜக தொண்டர்களும் தர்ணா போராட்டத்தை நடத்தினர். அப்போது அண்ணாமலையிடம் நிருபர் ஒருவர், “சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது தவறு இல்லை என உதயநிதி சொல்கிறாரே” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அண்ணாமலை பேசியதாவது:-

நீங்க ஒரு விஷயத்தை நல்ல புரிஞ்சுக்கணும். சேகர்பாபு அறநிலையத்துறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக தொண்டனாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளட்டும். அதை பற்றி பிரச்சினை கிடையாது. அது அரசியல். சனாதன ஒழிப்பு மாநாட்டில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி என்ன சொல்கிறார்? சனாதனமும், இந்து மதமும் ஒன்று எனக் கூறுகிறார். அதே மேடையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உட்காரந்திருக்காரு. எதுவுமே பேசாம எழுந்திருச்சி போறாரு.

சேகர்பாபு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் அவ்வளவு முறைகேடு நடந்திருக்கின்றன. எத்தனையோ கோயில் சொத்துகளை நாசம் பண்ணிருக்காங்க. சனாதன தர்மத்திற்கு முற்றிலும் எதிராக இந்து அறநிலையத்துறை இருக்கு. அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு இருப்பதை தான் நாங்கள் தவறு என சொல்கிறோம். தனிமனிதக் கருத்தை சொல்லிட்டு போ. அதை மக்கள் மன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு நீங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச வேண்டிய அவசியம் என்ன? சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து மதமும், சனாதனமும் ஒன்று என பேசிய கி. வீரமணியை ஒரு வார்த்தை கூட சேகர்புபாபு கேட்காதது ஏன் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என அண்ணாமலை கூறினார்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். டேங்க் பண்ட் சாலை சந்திப்பு அருகே தடுப்புகள் அமைத்து போலீசார் காத்திருந்தனர். ஊர்வலமாக வரும் பா.ஜ.க.வினரை போலீசார் மறிக்க தயாரான போது, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சனாதனம் குறித்து எப்படி தி.மு.க.வினர் விமர்சித்து பேசலாம்? சமூகநீதி என்று பேசும் தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட, பட்டியலின நபர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? பதவிகளில் அமர்த்தப்படுகிறார்களா? இவர்களுக்கு சனாதனம் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? என்று அண்ணாமலை தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்தார். வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை முழுவதும் பா.ஜ.க.வினர் அமர்ந்திருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் எழும்பூர், மவுண்ட் ரோடு, தியாகராயநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டனர். பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள், அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவே போராட்டம் அத்துடன் கைவிடப்பட்டதாக அண்ணாமலை அறிவித்தார். பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பா.ஜ.க.வினர் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக அண்ணாமலை உள்ளிட்ட ஆயிரம் பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் அப்படி பேசினால் நல்லதுதான். அப்போதுதான் பாஜக வளரும். திமுகவின் குடும்ப அரசியல், ஒவ்வொரு நாளும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது. தகுதி இல்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் குடும்ப அரசியல் மூலம் அமைச்சர்கள் ஆகிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறு. ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்கமுடியும். உண்மையான சனாதனம் பற்றி அவருக்கு தெரியாமல் இருக்கும். ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தலைக்கு விலை வைப்பதற்கு யார் அவர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாரத் பெயர் மாற்றப்படுவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும், பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை இந்தியா என்ற பெயரை வைத்ததனால் தான், பாரத் என பெயர் மாற்றுவதாக நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.